'புல்லாங்குழல்' கொண்டாட்டம்
நியூஜெர்சி: பிரான்ஸ் அணி கேப்டன் கிலியன் எம்பாப்வே. உலக கோப்பை கால்பந்தில் அதிக கோல் (14) அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
செனகல் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கோல் அடித்த எம்பாப்வே, புல்லாங்குழல் வாசிப்பது போல கைகளை வைத்து, சைகை செய்து கொண்டாடினார். இதன் பின்னணி சுவாரஸ்யமானது. 'பாக்ஸ் ஸ்போர்ட்ஸ்' சானலில் காமெடி நடிகர் ஜேம்ஸ் கார்டனுடன் இணைந்து, 'ஆப்டர் ஹவர் வித் ஜேம்ஸ் கார்டன்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இருவரும் காரில் பயணித்தனர். தனது சிறு வயதில் புல்லாங்குழல் வாசித்த நினைவுகளை கார்டனுடன் பகிர்ந்து கொண்டார்.
உடனே கார்டன், ஒரு புல்லாங்குழலை கொடுக்க, சிறிது நேரம் எம்பாப்வே வாசித்தார். அப்போது கார்டன் கூறுகையில்,'' உலக கோப்பை தொடரில் கோல் அடிக்கும் போது, புல்லாங்குழல் வாசிப்பது போல சைகை செய்து கொண்டாட வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற எம்பாப்வே அவருக்கு கொடுத்த வாக்குறுதியை, செனகல் போட்டியில் செய்து காட்டினார்.