ஏழாவது அதிசயம் ஜெர்மனி: 'உலக' கால்பந்தில் இமாலய வெற்றி

ஹூஸ்டன்: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த ஜெர்மனி அணி 7-1 என குராசோ அணியை வென்றது.

மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-9' ஜெர்மனி அணி, 82வது இடத்தில் உள்ள குராசோ அணியை சந்தித்தது. இப்போட்டியை காண ஹூஸ்டன் மைதானத்திற்கு 68,021 பேர் வந்தனர்.

ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் ஜெர்மனியின் பெலிக்ஸ் காலு நிமெச்சா ஒரு கோல் அடித்தார். இதற்கு, 21வது நிமிடத்தில் குராசோ வீரர் லிவானோ கோமெனென்சியா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஜெர்மனி அணிக்கு 38வது நிமிடத்தில் கிடைத்த 'கார்னர் கிக்' வாய்ப்பில் நத்தானியேல் பிரவுன் துாக்கி அடித்த பந்தை நிக்கோ ஷ்லோட்டர்பெக் தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+5வது) கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் லுாகாஸ் ஹாவர்ட்ஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் ஜெர்மனி அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. ஜமால் முசியலா (47வது நிமிடம்), கிறிஸ்டோபர் பிரவுன் (68வது), டெனிஸ் உன்தவ் (78வது), ஹாவர்ட்ஸ் (88வது) தலா ஒரு கோல் அடித்தனர். முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் குரோசா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.


ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.


'சீனியர்' பயிற்சியாளர்

குராசோ அணியின் தலைமை பயிற்சியார் டிக் அட்வோகாட் 78, உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் களமிறங்கிய மூத்த பயிற்சியாளர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் செக்குடியரசின் மிரோஸ்லவ் கோபெக், தென் ஆப்ரிக்காவின் ஹுகோ புரூஸ், தலா 74 வயதில் பயிற்சியாளராக இருந்தனர்.

* ஜெர்மனி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜூலியன் நாகெல்ஸ்மான் 38, இந்த சீசனில் இளம் பயிற்சியாளரானார். இரு பயிற்சியாளர்களின் வயது வித்தியாசம் 40.

களமிறங்கிய நுாயர்

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நுாயர், 2 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். குராசோ அணிக்கு எதிராக விளையாடிய இவர், உலக கோப்பை அரங்கில் பங்கேற்ற மூத்த (40 ஆண்டு, 79 நாள்) ஜெர்மனி வீரரானார். இதற்கு முன், லோதர் மத்தாயஸ் (39 ஆண்டு, 91 நாள்) சீனியர் வீரராக இருந்தார். கீப்பராக அசத்திய மானுவல் நுாயர், குராசோ அணியின் கோல் அடிக்கும் முயற்சியை ஒரு முறை தடுத்தார்.

பிரேசிலை முந்தியது

குரோசா அணிக்கு எதிராக 7 கோல் அடித்த ஜெர்மனி அணி, உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் பிரேசிலை (238 கோல், 115 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தது. ஜெர்மனி அணி 113 போட்டியில், 239 கோல் அடித்துள்ளது.

நான்கு முறை

உலக கோப்பை கால்பந்து அரங்கில், அதிக முறை ஒரு போட்டியில் 7 அல்லது அதற்கு மேல் கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து. இதுவரை 4 முறை (7-2, எதிர்: துருக்கி-1954, 8-0, எதிர்: சவுதி அரேபியா-2002, 7-1, எதிர்: பிரேசில்-2014, 7-1, எதிர்: குராசோ-2026) இப்படி சாதித்தது.

மோசமான தோல்வி

உலக கோப்பை கால்பந்து அரங்கில் அறிமுகமான முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த 2வது அணியானது குராசோ (1-7). இதற்கு முன் 1954ல் ஹங்கேரி அணிக்கு எதிராக தென் கொரிய அணி 0-9 என தோற்றிருந்தது.

ஐவரி கோஸ்ட் அசத்தல்

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் ஐவரி கோஸ்ட், ஈகுவடார் அணிகள் மோதின. இப்போட்டியை காண 68,274 பேர் வருகை தந்தனர். இப்போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியின் வாஹி, ஈகுவடாரின் ஜான் யெபோவா, நில்சன் அங்குலோ அடித்த பந்து 'கோல் போஸ்டில்' பட்டு திரும்பியதால் கோல் வாய்ப்பு நழுவியது. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ஐவரி கோஸ்ட் அணியின் அமத் டியாலோ, 90வது நிமிடத்தில் சகவீரர் வில்பிரைட் சிங்கோ 'பாஸ்' செய்த பந்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஈகுவடார் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தொடரை வெற்றியுடன் துவக்கியது. ஈகுவடார் அணி, 2024க்கு பின் (2024, செப். 6, எதிர்: பிரேசில்) முதல் தோல்வியடைந்தது. கடைசியாக விளையாடிய 19 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது.